என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, July 9, 2009

நிலவு முகம்


நிலவு பூமிக்கு இயற்கையாய் அமைந்த துணைக்கோள். நிலா பூமியிலிருந்து 384,403 கி.மீ தொலைவில் இருக்கிறது. பூமியின் விட்டத்தை விட இது சுமார் முப்பது மடங்கு அதிகம் ஆகும். நிலவு பூமியை முழுதாய் சுற்றி வருவதற்கு 27.322 பூமி நாட்கள் ஆகிறது. அது தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது. கிட்டத்திட்ட இரண்டும் ஒன்று போல இருப்பதால் பூமியிலிருந்து நிலவின் ஒரே பகுதியை மட்டுமே காண முடிகிறது. நிலவின் விட்டம் 3,474 கி.மீ ஆகும். ஆரம்ப காலத்தில் நிலவு தன்னைத்தானே வெகு வேகமாக சுற்றி வந்தது, ஆனால் காலப்போக்கில் பூமியிலிருந்து ஏற்பட்ட வளி உராய்வினால் அது மெல்ல மெல்ல மாறி இப்பொழுது எடுக்கும் சுமார் 29.5 நாட்களிலேயே நின்று போனது.

அது எப்படி நிலவின் ஒரு பகுதி மட்டுமே நமக்கு தெரிகிறது என்று இன்னும் குழப்பமாக இருந்தால், உங்களுக்கு ஒரு எளிய பரிசோதனை முயற்சியும் இணையத்தில் இருந்து கிடைத்திருக்கிறது. நாம் தேநீர் அருந்துவதற்கு ஒரு குவளையும், குவளையை வைக்கும் தட்டையும் பயன்படுத்துவோம் அல்லவா (கப் அண்ட் சாசர்) அதை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தட்டு பூமி எனக் கொள்க, குவளையை நிலா எனக் கொள்க. இப்பொழுது தட்டை நோக்கிய வண்ணம் குவளையின் கைப்பிடி இருப்பது போல குவளையை சரி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது மெல்ல மெல்ல குவளையை தட்டைச் சுற்றி சுற்றுங்கள், அதன் கைப்பிடி தட்டை நோக்கியபடி இருக்குமாறே! இப்பொழுது நீங்களே உணர்வீர்கள், இம்முறையில் குவளையைச் சுற்றும்போது, குவளை தன்னைத்தானே ஒரு முறை சுற்றியுள்ளதை! சந்தேகமிருப்பின் கைப்பிடி தட்டை நோக்கி வைத்து விட்டு, குவளையின் திசை மாறாமல் இப்பொழுது மறு முறை சுற்றிப் பாருங்கள், அது தொடங்கப்பட்ட இடத்திலிருந்து தட்டின் எதிர்ப்பக்கம் வரும்பொழுது தலைகீழாய்த் தெரியும். இப்படித்தான் நிலவும் பூமியைச் சுற்றுகிறது, தனது ஒரு முகத்தைக் காட்டியபடியே!

சரி, இப்பொழுது பௌர்ணமி மற்றும் அமாவாசை எப்படி ஏற்படுகின்றதென்று பார்ப்போம். நிலவு பூமியைச் சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறதென்றால் எப்படி 15 நாட்களுக்கொரு முறை பௌர்ணமியும், அமாவாசையும் மாறி மாறி வருகிறது? இந்தக் கேள்வி உங்களில் பலருக்குத் தோன்றியிருக்கக் கூடும். விடை இதோ இருக்கிறது. பூமியை முழுதாய் சுற்றி வர நிலா எடுக்கும் நேரத்தில் சரி பாதி, பூமியின் பாதி முகத்தை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்கிறது. மேலும் பூமிக்கும் நிலவிற்கும் நாம் ஏற்கனவே பார்த்தபடி இருக்கும் இடைவெளி 30 பூமியின் விட்டங்கள் ஆகும். இது தவிர நிலவின் சுற்றச்சு பூமியை கிடை மட்டத்திலல்லாது ஒரு புறமாய் சாய்ந்தவாறு சுற்றுகிறது. இதனால் பூமியின் இரவுப் பகுதியின் பின்புறமாக நிலவு செல்லும் பொழுது அமாவாசையும், பூமியின் இரவுப் பகுதியின் நேர் எதிர்புறம் நிலவு செல்லும் பொழுது பௌர்ணமியும் தோன்றுகிறது.

இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம், நேர் எதிர் என்றால் எப்படி என்று? அதாவது சூரியன், பூமி, நிலவு என்ற வரிசையில் வருவதே நேரெதிர் பகுதியென மேலே சுட்டியிருக்கிறேன். சரி அப்படியே வைத்துக் கொள்வதாயினும், பூமியின் நிழல் நிலவை மறைப்பதில்லையா என்ற கேள்வி வரலாம். சூரியனுக்கு முன்னர் பூமியின் அளவு மிகச்சிறிது, அதைவிடச் சிறிது நிலவு. ஒரு பெரிய வெளிச்ச கோளத்தின் முன்னர் கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் சின்ன உருளையான பூமி அதிக நிழலை ஏற்படுத்துவதில்லை, இருப்பினும் பூமி ஏற்படுத்தும் நிழல் நிலவை மறைக்க போதுமானதாகவே இருக்கிறது. இருப்பினும் நாம் ஏற்கனவே பார்த்தாற்போல நிலவின் அச்சு கிடைமட்டத்தில் இல்லாமல் ஒரு புறமாய் சரிந்தாற்போலவே இருப்பதால் நிலவு அந்த நிழலில் சிக்குவதில்லை. அப்படி சிக்கினால் என்ன ஆகும் என்பதை நாம் பின்னர் பார்ப்போம். ஆக நிலவின் ஒரு அரைப் பகுதி எப்பொழுதுமே ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் நம் பார்வைக்குத்தான் அது பிறை நிலவாகவும், முழுநிலவாகவும் தோற்றம் அளிக்கிறது. பூமியின் இருள்பகுதிக்கு நேர் எதிரே வரும்போது முழுநிலவாகவும், கொஞ்சம் இடப்புறமோ வலப்புறமோ வரும்போது வளரும் அல்லது தேயும் நிலவாகவோ தோற்றமளிக்கிறது. இந்தப் படம் உங்களுக்கு மேலே சொன்னதை விளக்கும்.





சந்திர கிரகணம் என்றால் என்ன? சூரிய கிரகணம் என்றால் என்ன என்று சந்தேகம் இருப்பவர்களுக்கு இது... சந்திர கிரகணம் என்பது நிலவு சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிர் புறம் இருக்கும்பொழுது நடைபெறுகிறது. ஆனால் நாம் இதை பௌர்ணமி என்றல்லவா பார்த்தோம் என்று தோன்றுகிறதா? அதுவும் உண்மைதான். ஒவ்வொரு சந்திர கிரகணமும் முழுப் பௌர்ணமி அன்றுதான் தோன்றுகிறது. நாம் மேலே ஏற்கனவே பார்த்தாற்போல பூமியின் நிழல் நிலவை மறைக்குமளவிற்கு பெரியதுதான், ஆனால் அதில் நிலவு சிக்குவதில்லை என்றும், சிக்கினால் என்ன ஆகும் என்பதை பின்னர் பார்க்கலாமென்றும் நான் கூறியது நினைவு வரலாம். சந்திரகிரகணம் அப்பொழுதுதான் நடைபெறுகிறது. இந்த படத்தைப் பாருங்கள்.



இந்தப் படத்தில் அம்ப்ரா, பெனம்ப்ரா என்று இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் அம்ப்ரா என்பது பூமியினால் ஏற்படும் நிழல் பகுதி. ஆயினும் சூரியன் பூமியை விட மிகப் பெரியது என்பதால் அதனுடைய நிழற்பகுதி முழுமையான நிழற்பகுதியாக இருப்பதில்லை. இது தவிர்த்து பூமியின் காற்று மண்டலம் வழியே ஊடுறுவும் சூரியக் கதிர்கள் நேர்க்கோட்டில் செல்லாமல் சற்று திரும்பிய பாதையில் பயணிப்பதாலும் இந்த நிழற்பகுதி செம்பு நிறம் பெறுகிறது. சந்திர கிரகணத்தின் பொழுது நிலவு பெரும்பாலும் மறைக்கப் படுவதில்லை. அதன் வண்ணம் மஞ்சள் நிறத்திலிருந்து திரிந்து செம்பு நிறத்தில் தெரியும். இதுவே சந்திர கிரகணம். நிலவின் சுழற்சி (பூமியைச் சுற்றும் சுழற்சி) வேகத்தால், அதிகபட்சம் 107 நிமிடங்கள் இந்த முழுச் சந்திரகிரகணம் தோன்றும், அதாவது அம்ப்ரா பகுதிக்குள் நிலவு இருக்கும் நேரம். மற்றபடி பெனம்ப்ரா பகுதில் நிலவு பயணிக்கும் சில சந்திர கிரகணங்களில் நிலவின் ஒரு பகுதி மஞ்சளாகவும் அதற்கு எதிர் பகுதி செம்பு நிறத்திலும் தெரியக் கூடும், இது மிகவும் அரிதாய் நடக்கக்கூடியதாகும். சந்திரகிரகணத்தை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம், பார்வை பாதிப்புக்குள்ளாகாது.

பலருக்கும் சூரிய கிரகணம் பற்றித் தெரிந்திருக்கக் கூடும். அது சூரியன், நிலவு, பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் பொழுது ஏற்படக் கூடியது. சரியாக நம் பகற்பொழுதில், பூமியின் பார்வையில் சூரியனுக்கு நேரிடையில் நிலவு வரும்பொழுது சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதாவது நிலவு சூரியனின் வெளிச்சத்தை பூமியில் விழவிடாதவண்ணம் தடுக்கிறது. இதன்மூலம் சூரியகிரகணம் நடைபெறுகிறது. பூமி சூரியனை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால், சில நேரம் நாம் சூரியனை விட்டு மிகத் தொலை தூரம் சுற்றுகின்ற பொழுது ஏற்படுகின்ற சூரியகிரகணத்தில் சூரியன் முழுதாய் மறைந்தும், பூமி சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் பொழுது ஏற்படும் சூரிய கிரகணத்தின் பொழுது சூரியன் ஒரு மோதிரம் போலத் தெரிவதும் நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தைப் போல சூரிய கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அது பார்வையை பாதிக்கும். அடர்தியான கண்ணாடியின் வழி, அதாவது ஒளியை மிக மிக குறைத்துக் காட்டும் கண்ணாடியைப் பயன்படுத்திப் பார்த்து மகிழலாம்.

மேற்கூறிய அனைத்தும் நான் இணையதளம் மற்றும் சில புத்தகங்கள் வழி கற்றறிந்த தகவல்களே. அதனால் இது மாறுதல்களுக்கு உட்பட்டதுதான். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள நீங்களும் தேடிப் படிக்கலாம். நன்றி!