என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, August 20, 2008

கதிரவன் காலையும் மாலையும்




(தெரிந்து கொள்ளுங்கள்: கதிரவன் = சூரியன்; ஞாலம், புவி = பூமி)

கதிரவன் நமது கதிரவக் குடும்பத்தின் ஆதாரம். இந்தக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அதில் நமது ஞாலம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கதிரவன் ஞாலத்தைச் சுற்றுகிறது என்ற கருத்து மறைந்து ஞாலம்தான் கதிரவனைச் சுற்றுகிறது என்று கண்டு பிடிக்கவே பல்லாயிர ஆண்டுகள் கழிந்திருக்கிறது.

கதிரவனின் நிறம் காலையும் மாலையும் சிவப்பு நிறத்திலும், மதிய நேரத்தில் மஞ்சள் நிறத்தில் தெரியும் காரணம் என்ன என்றும், மேலும் சில சுவையான சங்கதிகளையும் காண்போம்.

நமது ஞாலத்தைச் சுற்றியும் காற்று மண்டலம் இருப்பது எல்லோரும் அறிந்ததே, அதில் நிறைந்திருக்கும் கரியமில வாயு (கார்பன் - டை - ஆக்ஸைடு) இன்னும் சிற்சில வாயுக்களே அதில் அடக்கம். இவையெல்லாம் நமது புவிக்கு மிகப் பெரிய சேவை செய்து வருகிறது. இந்த அடர்த்தியான வெளியைக் கடந்து வரும் கதிரவனின் கதிர்கள் நீண்ட தூரம் வெளியில் கடக்க நேரிடுகிறது. மதிய நேரத்தில் ஞாலத்தின் உச்சியில் இருந்து ஒளிர்வதால், கதிரவனின் கதிர்கள் ஒரு நேர் கோடு போல சுருக்கமாக நம்மை நெருங்கிவிடுகிறது. ஆனால் காலை, மாலை நேரத்தில் கதிரவனின் கதிர்கள் பக்க வாட்டில் இருந்து வருவதால் அது நீண்ட தூரம் ஞாலத்தின் காற்று வெளியைக் கடந்து வருகிறது. அப்படி வரும்பொழுது கதிரவனின் நிறமாலை அலைவரிசையில் உச்ச அலைவரிசைகள் வரும் வழியிலேயே சிதைந்து விடுகிறது. மீதமிருக்கும் குறைந்த அலைவரிசை நிறமாலையே நம்மை வந்து சேர்கிறது. அப்படி மீதமாய் வரும் நிறம்தான் சிவப்பு. இதுவே கதிரவன் காலையும் மாலையும் சிவப்பு நிறத்தில் தெரிவதின் காரணமாகும்.

உண்மையில் கதிரவனின் நிறம் என்ன? கதிரவனின் கொள்ளளவில் 92% ஹைட்ரஜனும், 7% ஹீலியமும், மீதமிருப்பவை இரும்பு முதலிய மற்ற தாதுப் பொருட்களாகவும் இருக்கிறது. கதிரவனின் வெளிப்புற வெப்பம் தோராயமாக 5780 கெல்வின் ஆகும். கதிரவன் உண்மையில் வெள்ளை நிறத்தில்தான் இருக்கிறது. ஆனால் காற்று வெளியை கடந்து வரும்போது சிதைந்து விடும் புற ஊதா, மற்றும் நீலம் எல்லாம் தேய்ந்து காலை, மாலை நேரத்தில் சிவப்பாகவும், மதிய நேரத்தில் மஞ்சளாகவும் காட்சியளிக்கிறது.

இப்பொழுது கதிரவனின் அளவு ஏன் காலையும், மாலையும் பெரியதாகவும், மதிய நேரத்தில் சிறியதாகவும் தெரிகிறது என்று பார்ப்போம். பலருக்கும் தெரிந்த உண்மை காலையும், மாலையும் கதிரவனின் அளவு பெரிதாகத் தெரிகிறது என்றும், மதிய நேரத்தில் சிறியதாக தெரிகிறது என்றும். இது உண்மையா என்றால், இல்லை என்பதே பதில். ஒரு நாளின் காலை, மதியம், மாலை பார்க்கின்ற கதிரவனின் அளவு ஒன்றுதான். காலை, மாலையில் நாம் கதிரவனுக்கு மிக அருகிலேயோ அல்லது மதியத்தில் தூரத்திலோ நாம் இருப்பதில்லை. அப்படித் தெரிவது வெறும் பிரம்மை என்றே கொள்ளலாம். ஒரு பொருளின் அளவு இன்னொரு பொருளை வைத்தே மூளையால் (பார்வையால்) அறியப் படுகிறது. அது போல காலை, மாலை நேரங்களில் ஞாலத்திலுள்ள பொருடகளின் அருகிலே பார்ப்பதால் அது சற்று பெரிய அளவிலும், மதிய நேரத்தில் கண்கள் கூசக் கூச பார்ப்பதால் சிறிய அளவிலும் தெரிகிறது. மற்றபடி ஒரு நாளில் கதிரவனின் அளவு மாறுபடுவதில்லை. இது மேலும் நாம் ஏற்கனவே பேசிய காற்று வெளியில் கடந்து வரும் பிம்பம் அது கடந்து வரும் தூரத்தைக் குறித்தே வருவதாலும் இந்த பிரம்மை ஏற்படுகிறது. இதை பரிசோதிக்க எண்ணினால் கிரகணத்தின் பொழுது பயன்படுத்தும் கண்ணாடியை அணிந்து காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் அளந்து பார்க்கலாம் (அளப்பதற்கு சரியான அளவுகோலை பயன்படுத்தவும். மேலும் கண்களுக்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இதைச் செய்வது நன்று).

இப்பொழுது கதிரவனின் வெப்பம், காலையும் மாலையும் குறைவாகவும், மதிய நேரத்தில் அதிகமாகவும் இருப்பதற்கான காரணம் அறிவோம். இது சற்றே எளிமையான விளக்கமாகத்தான் இருக்குமென நம்புகிறேன். இரவு முழுவதும் குளிர்ந்துவிட்ட ஞாலத்தின் தரைப் பகுதியிலிருந்து வெளிப்படும் குளிரும், இரவு குளிர்ந்த காற்று வெளியும், அதனூடே கடந்து வருகின்ற கதிரவனின் கதிர்களின் வெப்பத்தை பெரிதளவில் குறைக்கிறது. மேலும் கதிரவனின் வெப்பக் கீற்றுகள், ஞாலத்தின் பக்கவாட்டுப் பக்கத்தில் இருந்து வந்து சேருவதால், வெப்பம் பல மடங்கு கடந்து வரும் காற்று வெளியிலேயே குறைந்து விடுகிறது. இதுவே கதிரவனால் ஞாலத்திற்கு ஏற்படும் வெப்ப மாற்றங்களின் காரணம்.

சூரியன் என்பது வடமொழிச் சொல் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமென்பது நான் அறியேன். இருப்பினும் சூரியனின் தமிழ்ச் சொற்களை இங்கே அளிக்கிறேன்.

பரிதி
ஞாயிறு
ஒள்ளி
சுள்ளான்
ஒளியவன்
திகிரி
இரவி
சுடரோன்
வெய்யோன்
பகலவன்
உதயன்
சுடர்
கிரண்
அருணன்

Tuesday, August 12, 2008

பணவீக்கம்

அன்புள்ள நண்பர்களே,
பணவீக்கம் என்றால் என்ன? பணம் எப்படி வீங்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப் பட்ட போதுதான், இத்தனைத் தகவல்களும் எனக்குத் தெரியவந்தது. இப்பொழுது அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

பணவீக்கம்:
பணம் வீங்குவதற்கான வாய்ப்பில்லை, ஆக பணவீக்கமென்பது எதை வைத்துக் கூறப்படுகிறது. அதாவது இப்படிச் சொன்னால் எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடும். விலை வீக்கம் அல்லது பண மதிப்பின்மை பெருக்கம் என்றும் கூறலாம். அதாவது ஆங்கிலத்தில் "Too munch of money, chasing too few goods" என்று இதைச் சொல்லுவார்கள். இது எப்படி ஒரு நாட்டில் உருவாகிறது என்பதை நாம் அறியவேண்டும். இதோ சில...

* பொருளின் பற்றாக்குறையும், தேவையின் அதிகரிப்பும்: ஒரு இடத்தில் 1000 பேருக்குத் தேவையான பொருளை 1500 பேர் வாங்க எண்ணுகிறார்களெனில், அந்தப் பொருளின் விலை அதிகரிக்கிறது. எந்த விதத்திலும் ஒருவரின் சம்பளமோ, அல்லது பொருளின் தரமோ அல்லது உண்மை விலையோ மாறாமல் இருக்கும்பொழுதும், அந்தப் பொருளின் விலை உயர்வதால் பணவீக்கம் ஏற்படுகிறது. இது கீழ்கண்ட சில காரணங்களாலும் அமையலாம்.
+ ஒரு ஊரில் மென்பொருள் நிறுவனங்கள் குவியத் தொடங்கிவிட்டால், அங்கே திடீரென்று வேலைக்கு பல மாநிலங்களிலிருந்து வந்து குவியும் மக்களின் தேவைக்கேற்ற பொருட்கள் அந்த ஊரில் கிடைத்து விடாது. அதே நேரத்தில் அவர்கள் இதற்கு முன்னால் இருந்த ஊரிலிருந்து அந்தப் பொருட்களும் வந்துவிடாது. ஆக இந்த திடீர் மாற்றத்தால், அந்த ஊரில் பொருட்களின் தேவை மிக அதிகமாகிறது, விலை ஏறுகிறது.

+ சில பொருட்களுக்கு அரிசி போன்ற பொருட்களுக்கு அரசாங்கமே விலை நிர்ணயிக்கிறது, ஆனால் அது எல்லப் பொருளுக்கும் அப்படி நடப்பதில்லை, ஆக அன்றையத் தேவைக்கும், அன்றைய சந்தையில் வந்திறங்கிய பொருட்களின் அளவைப் பொருத்தே விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. இதனாலும் பொருட்களின் விலை உயருகிறது.


* கற்பனை அல்லது வதந்தி: சில பொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடுமென்ற எண்ணத்தினாலும், அல்லது கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தினாலும் அதிகமாக வாங்கப் படுவதால், விலை அதிகரிப்பு. உதாரணத்திற்கு முழு அடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவைகளால் பலசரக்கு, எரிபொருள் போன்றவையின் விலை உயர்த்தப் படுகிறது.

* அரசாங்க மானியங்கள்: ஒரு அரசு பல நேரங்களில் விவசாயக் கடன் போன்றவைகளை ஓட்டு வங்கிக்காக ரத்து செய்யும், இது போன்ற சமயங்களில் அந்த பணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிப்பணத்தாலும், நுகர்வோர் அன்றாட செலவாகிய எரிபொருள் முதல் எள் வரை எல்லாவற்றிலும் சரமாரியாக ஏற்றப்படும்.

முதலில் ஒரு நாட்டின் பணப்புழக்கம் பற்றி அறிவோம். ஒரு நாட்டு மக்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? மூலத்தை ஆராய வேண்டும் இதற்கு. முதலில் ஒரு நாடு தன்னிடம் உள்ள தங்கத்தை வைத்து அதன் மதிப்பிற்கேற்ப பணத்தை அச்சடித்துக் கொள்கிறது. தங்கமில்லாத நாடுகள், அதனுடைய பொருள் வளங்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்கி, மீண்டும் அந்தத் தங்கத்தை வைத்து தனது பணத்தை அச்சடித்துக் கொள்ளும். இவ்வாறுதான் அரசுக்கு பணம் கிடைக்கிறது.

இப்பொழுது இந்தப் பணத்தை எப்படி மக்களிடம் சேர்ப்பது? இது மிகக் கடினமான மற்றும் சிரத்தையான வேலை. மக்கள் கைக்கு பணத்தை, வேலை மூலம் மட்டுமே கொடுக்க முடியும். அதாவது வங்கிக் கடன் வழங்கி, பின்னர் வாங்கியவர்கள் வேலை செய்து அதை அடைப்பது, அரசாங்க வேலைக்கு வேலைக்குச் சேரும் மக்கள் கையில் கிடைக்கும் பணமும் புழக்கத்திற்கு வரும். அதே சமயம் விவசாயம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே முதலில் நடந்து வந்ததால், பலசரக்கு பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும், அதை பணம் கொடுத்துப் பெருவதால், பணம் மக்களிடம் புழக்கத்திற்கு வருகிறது.

நாட்டின் பண மதிப்பு எப்படி மாறுகிறது? இதற்கான கேள்விக்கான விடை இரண்டு பாகமாகிறது. ஒன்று கருப்புப் பணமாக ஒதுக்கி வைக்கப் படும் பணம் கணக்கில் வராமல் போகிறது, அது தவறான வழிகளிலேயே புழங்கப் படுகிறது, மேலும் அந்நியச் செலாவனி மூலம். அதாவது வெளிநாட்டுப் பணம் சில பல காரணங்களாக இறக்குமதியாகுவது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் ஓர் அரசு எவ்வளவு பணத்தை அச்சிட வேண்டும் என்றும், பணப்புழக்கத்தை கட்டுப் படுத்துவதற்காக வட்டியை அதிகப்படுத்துவதும் நடக்கிறது (வீட்டு வட்டிக் கடன் ஏறி இறங்குவதற்கான காரணம் இதுதான்!)

இதைச் சரி செய்வதெப்படி? என்ற கேள்வி உடனே எல்லோருக்கும் எழும். இதை தனி மனித ஒழுக்கம் மூலமாகவும், அரசாங்கத்தின் மூலமும் சரி செய்ய முடியும்.

அதாவது முதலில் சரியான குடும்பமுறை அமைப்பும், கலாசாரமும் இது போன்ற விசயங்களை தடுக்கிறது. அது எப்படி இவையிரண்டும் இதைத் தடுக்குமென்பது முரணாகத் தோன்றுவது போலத்தான் இருக்கும். ஆனால் ஆணி வேர் இதுதான். ஒரு குடும்பத்திற்கான பணத்தேவை வருமானத்தை விட அதிகரிக்கும்போதுதான் அந்தக் குடும்பத்திற்கு கடன் மூலமாகவோ, அல்லது வேறு வழியிலோ பணம் தேவைப் படுகிறது. மேலும் பொருட்களை அளவான முறையில் சரியாகப் பயன்படுத்துவது, இதனால் பொருட்களின் (பணம்) வீணடிக்கப் படுவதில்லை. ஆனால் தற்பொழுது மாறி வரும் கலாச்சாரத்தால், பணத்தின் மதிப்பு மாறுகிறது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தல், அதிக சம்பளம் தரும் வேலைகளால் பணத்தின் மதிப்பு குறைகிறது, வீணடிப்புகள் அதிகரிக்கிறது. இது எல்லாமே பணவீக்கத்தின் அடிப்படைக் காரணம். இதைச் தனி மனித ஒழுக்கம் மூலம் சரி செய்யலாம்.

இரண்டாவது அரசாங்கம் செயல்பாடு. இது பலபேரும் அலசி ஆராயும், மேலும் அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாக்கப் படும் விசயமும் ஆகும். ஊழல் மூலம் கருப்புப் பணம், ஓட்டு வங்கியைக் காப்பாற்றுவதற்காக இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு போன்ற (அத்தியாவசியமில்லாத) விசயங்கள் மீண்டும் வரிப்பணமென்றும், பொருட்களின் விலையேற்றம் மூலமாகவும் மக்களின் கழுத்தையே மீண்டும் நெரிக்கிறது.

Sunday, August 10, 2008

சுப்பிரமணியபுரம் - விமர்சனம்





தமிழ்ப் படங்களில் வெகு சில படங்களே தொடும் கதைக்களத்தை எடுத்திருக்கிறது சுப்பிரமணியபுரம். அதற்காக நிச்சயம் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன சசிகுமாருக்கு பாராட்டுகள் தெரிவித்தே ஆகவேண்டும். இவர் பாலா, அமீர் ஆகிய இருவருடன் துணை இயக்குனராக பணியாற்றியது நிச்சயம் இவ்விடத்தில் நினைவு கூறப்பட வேண்டியுள்ளது. அவர்கள் இருவரின் சாயல் இவருடைய சுப்பிரமணியபுரம் படம் முழுக்க இருப்பதே அதற்கு சாட்சி.

படம் 80 களில் தொடங்கி நிகழ்காலத்தில் முடியும் திரைக்கதை கொண்டது எனினும், படத்தின் பெரும்பாலான, முக்கிய காட்சிகள் அனைத்துமே 80 களில் மட்டுமே நடக்கிறது. படம் ஒரு 28 வருடம் பின்னோக்கிப் பயணிப்பதால், அதற்குத் தேவையான வேலைப் பாடுகள் எளிதானவை அல்ல. அதற்காக ஒவ்வொரு காட்சியிலும் சிரமப் பட்டிருப்பது அழகாக வெளிவந்திருக்கிறது.

படத்தில் மூன்று நாயகர்கள் ஜெய், சசிகுமார், (கஞ்சா) கருப்பு. கதாநாயகியாக சுவாதி. தெலுங்குப் படத்தில் துணை நடிகையாக தலை காட்டிய சுவாதிக்கு சுப்பிரமணியபுரம் மூலமாக கதாநாயகி இடம் கிடைத்துள்ளது. உண்மையில் சொல்லப் போனால் வெகு சில படங்களில் மட்டுமே கதாநாயகிகள் கதாநாயகியாக வருகிறார்கள், மற்றும் பல படங்களில் ஆடல், பாடல் நாயகிகளாக மட்டுமே வருகின்றனர். அப்படிப் பார்த்தால் இந்தப் படத்தில் சுவாதி கதாநாயகி என்பதில் ஐயமில்லை.

தாடி, மீசை, அந்தக் காலத்து பாவாடை போன்ற கால்சட்டை இவைகளோடு ஜெய் அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இந்தப் படம் நடித்ததன் மூலம் இனி அவருக்கென வேடங்கள் ஏற்பது கொஞ்சம் சிரமப் படும். அவர் மீதான மக்களின் பார்வை இப்பொழுது ஒரு நல்ல கதையின் நாயகனாக பதிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. சசிகுமாரும், கருப்பும் அவரவர் பணியை வெகு சிறப்பாக செய்துள்ளனர்.

நண்பர்களென்றாலே கூத்து, கும்மாளம், நகர வாழ்க்கை என்ற எல்லையை மீறி எடுக்கப் பட்ட படங்கள் வெகு குறைவு, அதில் இது ஒன்று. இருப்பினும் இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது பருத்தி வீரன், பட்டியல் போன்ற படங்களை ஞாபகப் படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் போக இன்னொரு கதையின் நாயகனாக சமுத்திரக்கனி வருகிறார். இவரும் அவரது பாத்திரத்தை வெகு அழகாக செய்திருக்கிறார். நாயகிக்கு வாயால் பேசும் வசனத்தை விட கண்ணால் பேசும் வசனமே அதிகமாக இருப்பது ஒளித்திரையைக் கையாளும் முறையை வெகு அழகாக எடுத்துச் சொல்கிறது.

ஏற்றி விட்டது: 80 களின் சூழ்நிலைக்காக சிரமப் பட்டிருப்பது, சிறந்த கதை, திரைக்கதை

இறக்கி விட்டது: வழக்கமான கதாநாயகனுக்கே உரிய நீண்ட பெரிய வசனத்தை சசிகுமார் இறுதியில் பேசுவது, காட்டிக் கொடுக்க வந்த கஞ்சா கருப்பு அவ்வளவு நேரம் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருப்பது.

Saturday, August 9, 2008

டைனமிக் திருமணம்



அன்புத் தமிழ்நண்பர்களே,
யாரையும் சுட்டி எழுதாமல், இந்தத் தலைப்பை ஒட்டியும், இதையொட்டி முன்னிறுத்தப் பட்டக் கருத்துக்களோடு எனது கருத்தையும் துலாவில் வைக்கிறேன்.

இதை வாசிக்கும் முன்பு ஒரு முறை அந்த படத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

வாதத்திற்குச் செல்லும் முன் வாதப் பொருளைப் பற்றிய கருத்து இது. "டைனமிக் கல்யாணம் - இதுதான் தமிழன் பண்பாடு" டைனமிக் என்னும் தமிழ் வார்த்தையை, ஏன் குறைந்த பட்சம் சமஸ்கிருத வார்த்தையைக் கூட நான் கேள்விப் பட்டதில்லை, ஆனால் அந்த டைனமிக் தான் தமிழனின் கலாசாரம், பண்பாடு என்கிறார் சிநேகன், கேப்ரியல் மற்றும் சிலர்.

திருமணம், முக்கியமாக தாலி கட்டும் முறை இந்து எனப்படும் மதநெறியில் வருகிறது. ஆக இங்கே தமிழன் பண்பாடு எனும் போது, இது இந்துக்கள் பண்பாடா என்பது கேள்விக் குறியாகிறது. இந்து என்பவன் யார், தமிழன் என்பவன் யார் என்பது வேறு பேச்சாக போகட்டும். இப்பொழுது இந்துக்கள் தமிழனில் உள்ளான் என்றும், தமிழன் இந்து என்றும் வைத்து வாதாடுவோம்.

பொதுவாக திருமணங்கள் ஆதிவாசிகள் நடத்தினாலும், வேறு எந்த மொழிக் காரனோ அல்லது மதக் காரனோ நடத்துகையிலும் திருமணத்திற்காக ஏதாவது ஒன்றை அணிகிறார்கள். தாலி, மோதிரம், மெட்டி, சில வகையான கற்கள், இன்னும் பல. ஏனிந்த அடையாளம் தேவைப் படுகிறது? ஒரு சமூகத்தில் ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது, அதற்கு ஒரு அடையாளம் தேவைப் படுகிறது. ஏன் அவசியப் படுகிறது? ஒரு திருமணமானவரை திருமணமாகாதவர் திருமணம் செய்யும் காதல் எண்ணத்தோடு பார்க்கக் கூடாதென்பதால் அது அத்தியாவசியமாகிறது. மேலும் இதனுடைய பலன் நிறையவே. ஆனால் எங்கே இந்தப் பொருளுக்கு மரியாதை குறைந்துவிடுமோவென்ற பயத்தில் அந்தப் பொருளின் மீது ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் புகுத்தப் படுகிறது. அதை எப்பொழுதும் கருத்தில் கொள்வதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்யப் படுகிறது.

ஏன் அதை எப்பொழுதும் ஞாபகம் வைத்தல் வேண்டும். வெளியுலகத் தொடர்புக்கு வீட்டை விட்டு பிள்ளை பிரிந்து செல்லும்போது, பெரியவர்கள் வீட்டு ஞாபகம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் கூடா நட்பு, வேண்டா செயல் இவற்றைத் தடுக்க அந்த நினைவு தேவைப் படுகிறது. தான் யார், தனக்கென்று இருக்கும் கடமை மறக்கக் கூடாததற்காக அது சொல்லப் படுகிறது. அது போல மறந்தும் மாற்றாள் கணவரையோ, மாற்றான் மனைவியையோ காமம், காதல் போன்ற எண்ணத்தில் பார்த்து விடக் கூடாது என்றும், மணமானவர் வேறொருவரை அதே நோக்கோடு பார்க்கக் கூடாதென்பதற்காகவும் தான் எப்பொழுதும் கூடவே இருப்பதற்காக அந்தப் பொருள் சூட்டப் படுகிறது. ஆக இதுவே தாலியின் பயன்பாடு. அது போல ஆண்களுக்கு மெட்டி. இது சமீப காலமாக பெண்களுக்கே பூட்டப் படுகிறது, ஆணாதிக்கக் காலத்தில் நட்ந்திருக்கக் கூடும். ஆக தமிழன் பண்பாட்டில் பெண்களுக்குத் தாலியும், ஆண்களுக்கு மெட்டியும் அத்தியாவசியமாகிறது.

விதவைகள் சடங்குகளில் ஒதுக்கப்படுவதென்பது வயக்காட்டின் நெல்லுக்கிடையே முளைத்த புல் போன்றது. அதற்காக நெல்லையும், வயலையுமே தூக்கி எறிந்து விட்டு மாற்று வழி தேடுவது மூடத்தனமாகிறது. புல்லையும் மற்ற தேவையற்றவையையும் களைந்து எறிந்து விட்டு, நெல்லை வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதே அறிவு. மற்றவை அறிவீனம். விதவையை ஒதுக்கும் மூடநம்பிக்கையை களைய வேண்டுமே அன்றி, தமிழனின் சம்பிரதாயத்தையே ஒதுக்குதல் அறிவீணம் ஆகிறது.

இப்பொழுது கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் என்னும் பொருளுக்கு வருவோம். இது தவறே அல்ல என்பது போன்ற விவாதம் மிகவும் மேலோட்டமாக நடந்திருக்கிறது. இதைப் பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு முன்னர் வேறு ஒன்றைப் பற்றியும் பேச வேண்டி வருகிறது.

மோதிரம் மாற்றும் பழக்கமுடைய வெளிநாட்டுக் கல்யாண முறையைக் (திருமணமாகதவரும் மோதிரம் அணியலாம் என்பதால் யார் திருமணமானவர் என்பது கண்டுபிடிப்பது அரிது) கொண்டு தமிழகத்திலும், இந்தியாவிலும் வளர்க்கும் எண்ணத்தோடு இருக்கும் கேப்ரியலுக்கும், அவரது சிநேகனாக இருக்கும் சிநேகனுக்கும் வெளிநாட்டுப் பணம் குவிகிறது என்ற எண்ணமே வருகிறது. வெள்ளையன் நாட்டைப் பிடிக்கப் பயன்படுத்திய தந்திரம் இப்பொழுது வேறு பாணியில் இந்தியாவில் குடியேறி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பிரித்தாளும் முறையை எப்பொழுதுமே வெள்ளையன் நம்புகிறான், ஏனெனில் பலனும் கிடைக்கிறது. ஒரு சமூகத்தை அடக்கி ஆள வேண்டுமெனில், முதலில் அந்த சமூகத்தின் முதுகெலும்பான பண்பாட்டை, மொழியை உடைப்பது. பொதுவாகவே மொழிக்கும், சடங்கு, சம்பிரதாயம், பண்பாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆக அச்சமுதாயத்தினரை அவரது மொழியை விட வேறு மொழி சிறந்ததென்றும், தனது கலாசாரத்தை விட வேறு கலாசாரம் சிறந்ததென்றும் நம்ப வைக்க வேண்டியுள்ளது. இதைத்தான் செய்து அன்று வென்றான் வெள்ளையன். இன்று நாகரீகம் என்னும் பேரில், இரவாட்ட விடுதி, அது இது என்று இப்பொழுது டைனமிக் கல்யாணம் வரை ஒன்றொன்றாகப் பழகி வருகிறது இந்தியா. இதை ஊக்குவிக்கப் பயன்படுவது சில, பெண்ணியம் மற்றும் சம உரிமை என்னும் பேரில் நான் ஏற்கனவே சொன்னது போல் களை எடுப்பதற்குப் பதில் வயலையே ஒதுக்குவது போன்ற முறையில்தான் இவ்வளவும் அரங்கேறுகிறது என்பது ஆழ யோசித்தால் விளங்கும். அதே முறையில் இப்பொழுது விதவையை ஒதுக்குதல் மூடத்தனத்தை முன்னிருந்தி, டைனமிக் போன்ற திருமணங்கள் சமுதாயத்தில் எய்ட்ஸ் வைரஸ் போல பரவுகிறது.

கட்டிப் பிடித்தல், முத்தம் இவை பற்றிப் பேசுவோம். வெள்ளையன் யாரைப் பார்த்தாலும் அணைத்துக் கொள்வதும் அன்பாக ஒரு சின்ன முத்தம் கொடுப்பதும் வழக்கம். ஆனால் மிஞ்சிப் போனால் சந்திக்காதவர்கள் பழக்கமில்லாதவர்கள் சந்திக்கும் பொழுது ஒரு நொடி, அல்லது இரு நொடி மட்டுமே அணைப்பார்கள், அதுவும் உடலோடு உடல் அதிகம் ஒன்றாமல். ஆனால் டைனமிக்கில் ஏதோ பத்து வருடம் பழகிய நண்பனை நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பது போன்று ஆரத்தழுவி மூன்றுக்கும் மேற்பட்ட முத்தப் பரிமாற்றம் என்பது காமமின்றி வேறெதுவுமில்லை. ஆனால் அதைப் புரியாமல் செய்கிறார்கள் தமிழக அப்பாவி ஜனங்கள்.

முத்தமும், கட்டிப்பிடித்தலும் சர்வ சாதரணமாகிவிடின் உடலோடு உடல் புணர்வதைத் தவிர திருமணமானவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் வித்தியாசமில்லை. ஏன் இன்னும் கொஞ்ச நாள் கழித்து மேடையிலேயே உடலோடு உடல் புணர்ந்தும் கொள்ளலாம் என்று டைனமிக்கினர் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் அப்பொழுது உதடு, கன்னம் போல ஒரு சதைப் பிண்டம்தான் அண்டமும் என்ற கருத்து முன்வைக்கப் படலாம். இதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா? உடலே சதைப் பிண்டம்தான், அங்கனம் சதையும் சதையும் சேரும்போது சதையில் என்ன வித்தியாசம்??? கூசுகிறதா எண்ணம், வாசிக்கும் பொழுது???

கூசவில்லையெனில் இதற்கு மேலும் நீங்கள் வாசிக்க வேண்டாம், நீங்கள் டைனமிக் திருமணத்தை முழுமனதோடு ஆதரிக்கலாம். கூசியதெனில் இதுவே கூற்று, முத்தமும், கட்டிப் பிடித்தலுக்கும் உண்டான வரை முறைகள்.

ஒரு தாய், தனது பிள்ளையை அள்ளி அணைத்து முத்தம் தருவதும், ஒரு அண்ணன் தங்கையை முத்தமிடுவதற்கும் காமம் அறவே அற்ற அன்பு வேண்டும். அந்த உள்மன அன்போடுதான் நமது சமுதாயத்தில் அனைவரும் உள்ளனரா?

மேலும் ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது. நான் ஒருவரைக் கட்டிப்பிடிக்க என் மனது சுத்தமாக இருந்தால் போதும், அவரைப் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று. இது சற்று சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று. மலமிருக்கும் இடத்திலும் என்னால் மலம் ஒட்டாத உணவை உண்ண முடியும், ஆனால் மலத்தையும் தட்டிலேயே வைத்துக் கொண்டு உணவை உண்ணலாமென்பது தவறு. மலத்தையும், உணவையும் ஒன்று படுத்திப் பேசுவதற்கு மன்னிக்கவும், உணர்ந்தால் இதற்கும் டைனமிக்கிற்கும் எந்த வேறுபாடுமில்லையென்பது உங்களுக்குப் புரியும். கட்டிப் பிடித்தல் என்பது இருவர் சம்பந்தப் பட்டது, ஒருவர் சம்பந்தப்பட்டதல்ல. இருவரும் தனித்தனியே இருக்கும் வரைதான் உணர்வுகள் வேறு, ஒன்றானால் அங்கே இருவரின் உணர்வும் பார்க்கப் பட வேண்டியுள்ளது. நீங்கள் நீங்களாக மட்டுமே இருந்து பேசலாம், அரட்டை அடிக்கலாம், ஆனால் ஒரு உள்ளம் மட்டுமே தூய அன்போடு இருந்து கொண்டு மறுபுறம் உள்ள காம உள்ளம் கொண்டவரைக் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் ஆகாத காரியம்.

சிறிதும் சம்பந்தமே இல்லாத, ஒருவொருக்கொருவர் சற்றும் பழக்கப்படாத இருவரும் உள்ளன்போடு பார்த்த உடன் இருக்கிக் கட்டிப்பிடித்து முத்தமும் பரிமாறிக் கொள்ளலாம் என்பது உலகம் முழுதும் பூஞ்சோலையாக இருக்கும்போது ஏற்றுக் கொள்வோம், சாக்கடைகளும், புதைகுழிகளும் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில் தேவையற்றது. யானை வாங்கிவிட்டு துரட்டி வாங்கலாம், துரட்டி வாங்கியதிற்காக யானை வாங்குதல் தவறு.

தமிழனின் பண்பாட்டையும், பழக்க வழக்கத்தையும் டைனமிக் என்னும் ஒன்றுதான் முடிவு செய்யுமாயின், தமிழன் தயாராகலாம் அடுத்த அடிமையுகத்திற்கு!

Thursday, August 7, 2008

2008 ஒலிம்பிக் - ஒரு பார்வை

ஒலிம்பிக் போட்டி என்றது உலக நாடுகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்கின்ற ஒரு விளையாட்டு. இதில் ஒவ்வொரு நாடும் தன்னால் முடிந்த அளவிற்குத் தனது திறனைக் காட்டுகின்றது. இதில் இந்தியா எப்படி இருக்கிறது என்கின்றது இதப் பதிவு.

1928 - ம் ஆண்டு ஹாக்கிப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை ஒலிம்பிக்கில் பதிவு செய்தது. ஹாலந்தை எதிர்த்து 3 - 0 என்ற கணக்கில் பந்தையத்தை வென்றது. 2008 - ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தகுதி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வெல்லும் நாடுகளில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் எப்பொழுதுமே விருவிருப்பான போட்டி இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கவே போட்டி இருக்கும்.

அது என்ன பங்கேற்கவே போட்டி என்றால் நிச்சயம் இந்தியா பல தங்கங்களை வென்றிருக்க வேண்டுமே என்று தோன்றலாம். ஆனால் இது அந்தப் போட்டி அல்ல. சற்றே வித்தியாசமானது.

இந்தியாவின் அரசியல் சீர்கேடுகளில் சிக்காமல் போன விசயமேதும் உண்டா என்ன? ஒலிம்பிக் தேர்வுக் குழுவில் அரசியல் கலந்தே இருப்பதாகத்தான் சாமானிய மக்களுக்கும் படுகிறது. 2008 பீஜீங் ஒலிம்பிக் போட்டிக்காக பளுதூக்கும் போட்டிக்குப் பங்கேற்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சர்ச்சை உங்கள் பார்வைக்கு.

மோனிகா தேவி என்பவர் பளுதூக்கும் பிரிவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவர் தற்பொழுது ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியேற்றப் பட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 4 சோதனைகளில் தேர்வான என்மீது திடீரென்று இந்தக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது என்கிறார் அவர். பீஜிங் அனுப்புங்கள், அங்கே நிச்சயம் தேர்வாவேன், இந்தியாவில் சரியான முறையில் சோதனை நடத்தப்படவில்லை என்கிறார். இதற்குக் காரணம் ஆந்திராவைச் சேர்ந்த ஷைலஜா பூஜாரி என்கிறார் இவர். அவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவே என்னை கடைசி நேரத்தில் இந்தச் சிக்கலில் மாட்டிவிடுகின்றனர் என்கிறார்.

எது எப்படியோ, ஆனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க சிறந்த திறமை மட்டும் போதாது, அரசியல் செல்வாக்கோ அல்லது பணவசதியோ இருத்தல் அவசியம் என்று மக்கள் எண்ணுவதை இது போன்ற சம்பவங்கள் ஊர்ஜிதப் படுத்துகிறது.

குசேலன் - எனது பார்வையில்



பனையுயர ரஜினியின் நிழற்படத்தையும், இது ரஜினிப் படம் ரஜினிப் படமென்று மிகப்பெரிய பரபரப்பாகப் பேசப்பட்ட குசேலன் என்ற திரைப்படம் சிவாஜி என்ற படத்திற்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்திறங்கியது. பாடல் வெளியீட்டு விழாவிலிருந்து, எந்த பேச்சுகளிலும் புகைப்படங்களிலும் ரஜினியைத் தவிர மற்று பிறர் கடுகளவுக்கு இடம் பிடித்திருந்தாலும் ஆச்சரியத்தக்கதே. ரஜினியே சில இடங்களில் நான் வெறும் 25% தான் படத்தில் வருவதாகக் கூறிய பொழுதும், இயக்குனர் வாசு ரஜினியின்றிப் படமே இல்லை, அவர்தான் முழுக்க முழுக்க என்று முழங்கினார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வழக்கமாக ரஜினிப் படம் பார்க்கும் எண்ணத்திலேயே படம் பார்க்க ஆரம்பித்தேன்........

படத்தின் கதையை எந்த விதத்திலும் நானிங்கே பதிவு செய்ய விரும்பவில்லை, ஏனெனில் அப்படியே பதிவு செய்வதாயினும் அது என்ன கதை என்பதை நான் எழுதியாக வேண்டும், அதற்காக அந்தப் படத்தில் கதை தேடி அலையும் பொறுப்பு எனக்குப் பெரிய பொறுப்பாகி விடும். அதனால் நான் கதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

எனக்குத் தெரிந்து....

கதையின் நாயகன் பசுபதி, நாயகி மீனா, நயந்தாராவும் நாயகிதான். நகைச்சுவைக்கு வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி, லிவ்விங்ஸ்டன், மனோபாலா, சுந்தர் ராஜன் இன்னும் சிலர். கௌரவ வேடத்திற்கும் சற்றே அதிகமான வேடத்தில் ரஜினி. மேலும் பிரபுவும், மற்றும் சிலரும் வந்து போகின்றனர்.

ரஜினி என்ற ஒரு மாயை போன்ற சொல்லை வைத்துக்கொண்டு படத்தை எப்படியும் ஓட்டி விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாசு படம் எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ரஜினி படம் என்ற ஆர்வத்தோடு முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆயிரம் கூட கொடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு வெயில் போன்ற ஒரு படத்தைக் காண முடிந்திருக்கும் (இப்படிச் சொல்லி வெயில் படத்தைக் குறைத்துக் கூறுவதாய் எண்ணி விட வேண்டாம், அந்தப் படம் இந்தப் படத்தை விட நன்றாகவே இருக்கும்).

பாலிய நண்பர்களாகிய ரஜினியும் பசுபதியும் படத்தின் கடைசி காட்சி வரை சந்திக்கவே இல்லை, இறுதியில் எப்படிச் சந்திக்கிறார்கள் என்று ஒரு பதிவுச் சுருளாய்ப் படம். இரண்டரை மணி நேரம் எதார்த்த படம் என்பதற்காக சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் வரை ஒற்றைப் பேருந்தின் ஓர இடத்தில் கேமிராவை வைத்து பதிவு செய்து விட முடியாது என்பதை வாசு புரிந்து கொள்ளுதல் அவசியம். ரஜினி வந்து போகும் காட்சிகள் தவிர மீதிக் காட்சிகளுக்கும் கடும்பாடு படாமல் மீதமிருக்கும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு வாசு மனதிற்குத் தோன்றியதெல்லாவற்றையும் எடுத்திருக்கிறார்.

கஞ்சிக்கே வழியில்லாத மீனா அழகான உடையில் அவ்வப்பொழுது வலம்வந்து போகிறார். வெயில் படத்தின் பசுபதி அவ்வாறே மிளிர்கிறார். ரஜினி அவர் காட்சியை அழகாகவே நடித்துள்ளார். மிகப் பெரிய காவல் துறை அதிகாரியாக பிரபு வந்து போகிறார் (சந்திரமுகி நட்பின் தொடர்ச்சி போலும்....), சில பல அஜீத், விஜய், விஜயகாந்த் படத்தில் பாடலுக்கு மட்டுமே வந்து போகின்ற கதாநாயகிகளுடன் ஒத்துப் பார்த்தால் நிச்சயம் நயந்தாரா கதாநாயகிதான். எதற்கு வருகிறார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் வாசுவிற்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஒரே டேக்கில் மொத்தப் பாடலாய் ரஜினியும் நயந்தாராவும் காதல் புரிகிறார்கள்!!!, சந்தானபாரதிக்கு இப்படி ஒரு மோசமான வேடம் கிடைத்ததில்லை (தசாவதாரத்திற்கு கீழாக...), நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம், வடிவேலு செய்வதை கொஞ்சமும் சகிக்க முடியவில்லை.

துண்டுத் துக்கடாவாக காட்சிகள் சம்பந்தமே இல்லாமல் வருவது கொலை. படத்தின் இறுதி இருபது நிமிடக் காட்சியைத் தவிர படத்தில் வேறொன்றுமில்லை. இதை 20 நிமிடக் குறும்படமாகத் தயாரித்து யூடியூபிலும், கூகிள் வீடியோவிலும் வெளியிட்டிருக்கலாம், பாவம் ரசிகர்கள். இதை ஒரு மசாலா படமாக கொஞ்சமும் கதையே இன்றி பார்க்குமளவுக்கு சண்டையோ, குத்துப் பாடல்களோ, அம்மா, அக்கா அன்புக் காட்சிகளோ இல்லை, சரி என்னடா இது, பட்டியல், வெயில், பருத்திவீரன் போன்ற பட வரிசையில் ஒரு எதார்த்தப் படமாகப் பார்க்கலாமென்றால் அதற்கும் வழியில்லை, ஏனெனில் அதில் கதையோ, கதாப் பாத்திரத்திலோ ஒரு அழுத்தமே இல்லை. வேறு எப்படித்தான் பார்ப்பது??? ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்தை ரஜினி படம் என்று நினைத்துப் பார்க்க வேண்டாம், கதை ரசிகர்களுக்குப் படத்தில் வேலையே இல்லை, பொழுதுபோக்குக்காகப் பார்ப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

ரஜினியும், பாலச்சந்தரும் இருந்தும் ஒரு படம் இந்த அளவிற்கு மோசமாகப் பதிக்கப் பட்டிருப்பதற்கு இருவரும் வருந்தியே ஆகவேண்டும்!

தேநீர் நேரம் பற்றி

அன்பு நண்பர்களே,
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும். சில நேரத்தில் ஆதங்கம் இருக்கும், சில நேரத்தில் வேதனை இருக்கும், சில நேரங்களில் மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இது போன்று எனக்குத் தோன்றுபவைகளையும், சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவரும் நோக்கோடு இதை ஆரம்பிக்கிறேன். இதில் இடப்படும் நிகழ்வுகள் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக அல்ல. பொதுநோக்குடன் எழுதப்படும் எனது சுயசிந்தனையே.

வாருங்கள் தேநீர் பருகுவோம்!