
(தெரிந்து கொள்ளுங்கள்: கதிரவன் = சூரியன்; ஞாலம், புவி = பூமி)
கதிரவன் நமது கதிரவக் குடும்பத்தின் ஆதாரம். இந்தக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அதில் நமது ஞாலம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கதிரவன் ஞாலத்தைச் சுற்றுகிறது என்ற கருத்து மறைந்து ஞாலம்தான் கதிரவனைச் சுற்றுகிறது என்று கண்டு பிடிக்கவே பல்லாயிர ஆண்டுகள் கழிந்திருக்கிறது.
கதிரவனின் நிறம் காலையும் மாலையும் சிவப்பு நிறத்திலும், மதிய நேரத்தில் மஞ்சள் நிறத்தில் தெரியும் காரணம் என்ன என்றும், மேலும் சில சுவையான சங்கதிகளையும் காண்போம்.
நமது ஞாலத்தைச் சுற்றியும் காற்று மண்டலம் இருப்பது எல்லோரும் அறிந்ததே, அதில் நிறைந்திருக்கும் கரியமில வாயு (கார்பன் - டை - ஆக்ஸைடு) இன்னும் சிற்சில வாயுக்களே அதில் அடக்கம். இவையெல்லாம் நமது புவிக்கு மிகப் பெரிய சேவை செய்து வருகிறது. இந்த அடர்த்தியான வெளியைக் கடந்து வரும் கதிரவனின் கதிர்கள் நீண்ட தூரம் வெளியில் கடக்க நேரிடுகிறது. மதிய நேரத்தில் ஞாலத்தின் உச்சியில் இருந்து ஒளிர்வதால், கதிரவனின் கதிர்கள் ஒரு நேர் கோடு போல சுருக்கமாக நம்மை நெருங்கிவிடுகிறது. ஆனால் காலை, மாலை நேரத்தில் கதிரவனின் கதிர்கள் பக்க வாட்டில் இருந்து வருவதால் அது நீண்ட தூரம் ஞாலத்தின் காற்று வெளியைக் கடந்து வருகிறது. அப்படி வரும்பொழுது கதிரவனின் நிறமாலை அலைவரிசையில் உச்ச அலைவரிசைகள் வரும் வழியிலேயே சிதைந்து விடுகிறது. மீதமிருக்கும் குறைந்த அலைவரிசை நிறமாலையே நம்மை வந்து சேர்கிறது. அப்படி மீதமாய் வரும் நிறம்தான் சிவப்பு. இதுவே கதிரவன் காலையும் மாலையும் சிவப்பு நிறத்தில் தெரிவதின் காரணமாகும்.
உண்மையில் கதிரவனின் நிறம் என்ன? கதிரவனின் கொள்ளளவில் 92% ஹைட்ரஜனும், 7% ஹீலியமும், மீதமிருப்பவை இரும்பு முதலிய மற்ற தாதுப் பொருட்களாகவும் இருக்கிறது. கதிரவனின் வெளிப்புற வெப்பம் தோராயமாக 5780 கெல்வின் ஆகும். கதிரவன் உண்மையில் வெள்ளை நிறத்தில்தான் இருக்கிறது. ஆனால் காற்று வெளியை கடந்து வரும்போது சிதைந்து விடும் புற ஊதா, மற்றும் நீலம் எல்லாம் தேய்ந்து காலை, மாலை நேரத்தில் சிவப்பாகவும், மதிய நேரத்தில் மஞ்சளாகவும் காட்சியளிக்கிறது.
இப்பொழுது கதிரவனின் அளவு ஏன் காலையும், மாலையும் பெரியதாகவும், மதிய நேரத்தில் சிறியதாகவும் தெரிகிறது என்று பார்ப்போம். பலருக்கும் தெரிந்த உண்மை காலையும், மாலையும் கதிரவனின் அளவு பெரிதாகத் தெரிகிறது என்றும், மதிய நேரத்தில் சிறியதாக தெரிகிறது என்றும். இது உண்மையா என்றால், இல்லை என்பதே பதில். ஒரு நாளின் காலை, மதியம், மாலை பார்க்கின்ற கதிரவனின் அளவு ஒன்றுதான். காலை, மாலையில் நாம் கதிரவனுக்கு மிக அருகிலேயோ அல்லது மதியத்தில் தூரத்திலோ நாம் இருப்பதில்லை. அப்படித் தெரிவது வெறும் பிரம்மை என்றே கொள்ளலாம். ஒரு பொருளின் அளவு இன்னொரு பொருளை வைத்தே மூளையால் (பார்வையால்) அறியப் படுகிறது. அது போல காலை, மாலை நேரங்களில் ஞாலத்திலுள்ள பொருடகளின் அருகிலே பார்ப்பதால் அது சற்று பெரிய அளவிலும், மதிய நேரத்தில் கண்கள் கூசக் கூச பார்ப்பதால் சிறிய அளவிலும் தெரிகிறது. மற்றபடி ஒரு நாளில் கதிரவனின் அளவு மாறுபடுவதில்லை. இது மேலும் நாம் ஏற்கனவே பேசிய காற்று வெளியில் கடந்து வரும் பிம்பம் அது கடந்து வரும் தூரத்தைக் குறித்தே வருவதாலும் இந்த பிரம்மை ஏற்படுகிறது. இதை பரிசோதிக்க எண்ணினால் கிரகணத்தின் பொழுது பயன்படுத்தும் கண்ணாடியை அணிந்து காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் அளந்து பார்க்கலாம் (அளப்பதற்கு சரியான அளவுகோலை பயன்படுத்தவும். மேலும் கண்களுக்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இதைச் செய்வது நன்று).
இப்பொழுது கதிரவனின் வெப்பம், காலையும் மாலையும் குறைவாகவும், மதிய நேரத்தில் அதிகமாகவும் இருப்பதற்கான காரணம் அறிவோம். இது சற்றே எளிமையான விளக்கமாகத்தான் இருக்குமென நம்புகிறேன். இரவு முழுவதும் குளிர்ந்துவிட்ட ஞாலத்தின் தரைப் பகுதியிலிருந்து வெளிப்படும் குளிரும், இரவு குளிர்ந்த காற்று வெளியும், அதனூடே கடந்து வருகின்ற கதிரவனின் கதிர்களின் வெப்பத்தை பெரிதளவில் குறைக்கிறது. மேலும் கதிரவனின் வெப்பக் கீற்றுகள், ஞாலத்தின் பக்கவாட்டுப் பக்கத்தில் இருந்து வந்து சேருவதால், வெப்பம் பல மடங்கு கடந்து வரும் காற்று வெளியிலேயே குறைந்து விடுகிறது. இதுவே கதிரவனால் ஞாலத்திற்கு ஏற்படும் வெப்ப மாற்றங்களின் காரணம்.
சூரியன் என்பது வடமொழிச் சொல் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமென்பது நான் அறியேன். இருப்பினும் சூரியனின் தமிழ்ச் சொற்களை இங்கே அளிக்கிறேன்.
பரிதி
ஞாயிறு
ஒள்ளி
சுள்ளான்
ஒளியவன்
திகிரி
இரவி
சுடரோன்
வெய்யோன்
பகலவன்
உதயன்
சுடர்
கிரண்
அருணன்
8 comments:
அருமையான விஷயம் ... இது போன்று ஆகாயம் குறித்து வேறு செய்திகளும் அறிய காத்திருக்கிறோம் :)))
வாழ்த்துக்கள் சூரியனே :D
Lot of new informations. Thanks ... Keep it up.
Migavum Payanullathaka irunthathu..
நன்றி காந்தி. தகவல் சேகரித்து எழுதுகிறேன்.
நன்றி சந்தியா
நன்றி செந்தில்!
அருமையான கருத்துகள் சொல்லியதற்கு மிக்க நன்றி.
நன்றி இலக்குமி
Post a Comment