
பனையுயர ரஜினியின் நிழற்படத்தையும், இது ரஜினிப் படம் ரஜினிப் படமென்று மிகப்பெரிய பரபரப்பாகப் பேசப்பட்ட குசேலன் என்ற திரைப்படம் சிவாஜி என்ற படத்திற்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்திறங்கியது. பாடல் வெளியீட்டு விழாவிலிருந்து, எந்த பேச்சுகளிலும் புகைப்படங்களிலும் ரஜினியைத் தவிர மற்று பிறர் கடுகளவுக்கு இடம் பிடித்திருந்தாலும் ஆச்சரியத்தக்கதே. ரஜினியே சில இடங்களில் நான் வெறும் 25% தான் படத்தில் வருவதாகக் கூறிய பொழுதும், இயக்குனர் வாசு ரஜினியின்றிப் படமே இல்லை, அவர்தான் முழுக்க முழுக்க என்று முழங்கினார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வழக்கமாக ரஜினிப் படம் பார்க்கும் எண்ணத்திலேயே படம் பார்க்க ஆரம்பித்தேன்........
படத்தின் கதையை எந்த விதத்திலும் நானிங்கே பதிவு செய்ய விரும்பவில்லை, ஏனெனில் அப்படியே பதிவு செய்வதாயினும் அது என்ன கதை என்பதை நான் எழுதியாக வேண்டும், அதற்காக அந்தப் படத்தில் கதை தேடி அலையும் பொறுப்பு எனக்குப் பெரிய பொறுப்பாகி விடும். அதனால் நான் கதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
எனக்குத் தெரிந்து....
கதையின் நாயகன் பசுபதி, நாயகி மீனா, நயந்தாராவும் நாயகிதான். நகைச்சுவைக்கு வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி, லிவ்விங்ஸ்டன், மனோபாலா, சுந்தர் ராஜன் இன்னும் சிலர். கௌரவ வேடத்திற்கும் சற்றே அதிகமான வேடத்தில் ரஜினி. மேலும் பிரபுவும், மற்றும் சிலரும் வந்து போகின்றனர்.
ரஜினி என்ற ஒரு மாயை போன்ற சொல்லை வைத்துக்கொண்டு படத்தை எப்படியும் ஓட்டி விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாசு படம் எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ரஜினி படம் என்ற ஆர்வத்தோடு முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆயிரம் கூட கொடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு வெயில் போன்ற ஒரு படத்தைக் காண முடிந்திருக்கும் (இப்படிச் சொல்லி வெயில் படத்தைக் குறைத்துக் கூறுவதாய் எண்ணி விட வேண்டாம், அந்தப் படம் இந்தப் படத்தை விட நன்றாகவே இருக்கும்).
பாலிய நண்பர்களாகிய ரஜினியும் பசுபதியும் படத்தின் கடைசி காட்சி வரை சந்திக்கவே இல்லை, இறுதியில் எப்படிச் சந்திக்கிறார்கள் என்று ஒரு பதிவுச் சுருளாய்ப் படம். இரண்டரை மணி நேரம் எதார்த்த படம் என்பதற்காக சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் வரை ஒற்றைப் பேருந்தின் ஓர இடத்தில் கேமிராவை வைத்து பதிவு செய்து விட முடியாது என்பதை வாசு புரிந்து கொள்ளுதல் அவசியம். ரஜினி வந்து போகும் காட்சிகள் தவிர மீதிக் காட்சிகளுக்கும் கடும்பாடு படாமல் மீதமிருக்கும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு வாசு மனதிற்குத் தோன்றியதெல்லாவற்றையும் எடுத்திருக்கிறார்.
கஞ்சிக்கே வழியில்லாத மீனா அழகான உடையில் அவ்வப்பொழுது வலம்வந்து போகிறார். வெயில் படத்தின் பசுபதி அவ்வாறே மிளிர்கிறார். ரஜினி அவர் காட்சியை அழகாகவே நடித்துள்ளார். மிகப் பெரிய காவல் துறை அதிகாரியாக பிரபு வந்து போகிறார் (சந்திரமுகி நட்பின் தொடர்ச்சி போலும்....), சில பல அஜீத், விஜய், விஜயகாந்த் படத்தில் பாடலுக்கு மட்டுமே வந்து போகின்ற கதாநாயகிகளுடன் ஒத்துப் பார்த்தால் நிச்சயம் நயந்தாரா கதாநாயகிதான். எதற்கு வருகிறார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் வாசுவிற்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஒரே டேக்கில் மொத்தப் பாடலாய் ரஜினியும் நயந்தாராவும் காதல் புரிகிறார்கள்!!!, சந்தானபாரதிக்கு இப்படி ஒரு மோசமான வேடம் கிடைத்ததில்லை (தசாவதாரத்திற்கு கீழாக...), நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம், வடிவேலு செய்வதை கொஞ்சமும் சகிக்க முடியவில்லை.
துண்டுத் துக்கடாவாக காட்சிகள் சம்பந்தமே இல்லாமல் வருவது கொலை. படத்தின் இறுதி இருபது நிமிடக் காட்சியைத் தவிர படத்தில் வேறொன்றுமில்லை. இதை 20 நிமிடக் குறும்படமாகத் தயாரித்து யூடியூபிலும், கூகிள் வீடியோவிலும் வெளியிட்டிருக்கலாம், பாவம் ரசிகர்கள். இதை ஒரு மசாலா படமாக கொஞ்சமும் கதையே இன்றி பார்க்குமளவுக்கு சண்டையோ, குத்துப் பாடல்களோ, அம்மா, அக்கா அன்புக் காட்சிகளோ இல்லை, சரி என்னடா இது, பட்டியல், வெயில், பருத்திவீரன் போன்ற பட வரிசையில் ஒரு எதார்த்தப் படமாகப் பார்க்கலாமென்றால் அதற்கும் வழியில்லை, ஏனெனில் அதில் கதையோ, கதாப் பாத்திரத்திலோ ஒரு அழுத்தமே இல்லை. வேறு எப்படித்தான் பார்ப்பது??? ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்தை ரஜினி படம் என்று நினைத்துப் பார்க்க வேண்டாம், கதை ரசிகர்களுக்குப் படத்தில் வேலையே இல்லை, பொழுதுபோக்குக்காகப் பார்ப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
ரஜினியும், பாலச்சந்தரும் இருந்தும் ஒரு படம் இந்த அளவிற்கு மோசமாகப் பதிக்கப் பட்டிருப்பதற்கு இருவரும் வருந்தியே ஆகவேண்டும்!
7 comments:
ஆமாம் படம் பார்த்து ஏமார்ந்து போன பலரில் நானும் ஒருவன். ரஜினி நடித்து இவ்வுளவு மோசமான ஒரு படம் இதுவரை கண்டதில்லை ...
உண்மைதான் சுதாகர்! என்ன செய்ய? மக்கள் இன்னும் நம்புறாங்களே!!!
ஒரு நல்ல கதையை ரஜினியின் மூலம் நாசமாக்கிவிட்டார்கள். மலையாளத்தில் வந்த மூலப்படத்தை தயவு செய்து பார்க்கவும் “கதபரயும்போள்”
நிச்சயம் பார்க்கிறேன் அண்ணா.
yepdi padam yeduthalum papanunga da tappu kanaku potrukar!
iniyavathu usara irukatum
உண்மைதான் வாசுவின் கோளாரால் ஏற்பட்ட வினை. படம் எடுத்து முடிப்பதற்குள் அவர் பேசாத பேச்சே அல்ல!!!
Post a Comment